ஷா ஆலம், செப் 30- நாட்டில் கோழியின் விலை கடந்த பிப்ரவரி மாதம் கிலோ 11.00 வெள்ளி வரை உயர்வு கண்ட நிலையில் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு உதவும் நோக்கில் சிலாங்கூர் அரசு மலிவு விற்பனையை அறிமுகப்படுத்தியது.
அத்தியாவசிய பொருள்களை மலிவான விலையில் விற்பனை செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்த நாட்டின் முதல் மாநிலமாகவும் இந்த சிலாங்கூர் விளங்குகிறது.
சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) மூலம் இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநில அரசு கோழியின் விலையை கிலோ 8.00 வெள்ளியாக நிர்ணயித்தது. அரசாங்கம் அறிவித்த உச்சவரம்பு விலையான வெ.8.90 ஐ விட இது மிகவும் மலிவாகும்.
அதே சமயம் உணவுப் பொருள் விலை தலையீட்டுத் திட்டத்தின் கீழ் சந்தையில் 12.30 வெள்ளி விலையில் விற்கக்கூடிய ஒரு தட்டு பி கிரேட் முட்டையை வெறும் 12.40 வெள்ளிக்கு மாநில அரசு விற்பனை செய்தது.
விஸ்மா பி.கே.பி.எஸ், பாசார் போரோங் சிலாங்கூர், சுபாங் ஜெயா ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட இந்த மலிவு விற்பனையில் கலந்து பொருள்களை மலிவான விலையில் வாங்குவதற்கு மக்கள் போட்டியிட்டனர்.
இந்த விற்பனைத் திட்டத்தின் கீழ் 50 கோழிகள் 30 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்ததாக பாசார் போரோங் சந்தை விற்பனையாளரான ஹடீர் ஹஷிம் கூறினார். வழக்கமாக காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை வியாபாரம் மேற்கொண்டால் மட்டுமே இந்த கோழிகளை விற்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த மலிவு விற்பனையின் வழி பொதுமக்கள் மட்டுமின்றி வியாபாரிகளும் பயனடைந்தனர். கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து மீளும் நிலையிலும் பொருள்கள் விலையேற்றம் கண்டு வரும் சூழலிலும் இந்த மலிவு விற்பனையை மாநில அரசு அறிமுகப்படுத்தியது ஒரு சரியான நடவடிக்கையாகும் என்று பொது மக்கள் வர்ணித்தனர்.


