ஷா ஆலம், செப் 30- இவ்வாண்டு இறுதியில் சிலாங்கூரில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் வெள்ளப் பேரிடரை எதிர் கொள்வதற்கு 8,543 தற்காலிக கூடாரங்களை ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தார் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் அறக்கட்டளை மூலம் கடந்த மே மாதம் முதல் கட்டம் கட்டமாக இந்த பொருள்கள் வழங்கப்பட்டு வருவதாக மாநிலச் செயலாளர் அலுவலகத்தின் மேலாண்மை சேவைகள் பிரிவு செயலாளர் தெரிவித்தார்.
மேன்மை தங்கிய சுல்தானின் இந்த நன்கொடை அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்படுகிறது. சிலாங்கூரில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் இப்பொருள்கள் பகிர்ந்தளிக்கப்படும். வெள்ள அபாயம் உள்ள பகுதிகளுக்கு விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று முகமது ஷா ஒஸ்மின் இன்று சிலாங்கூர் மாநில பேரிடர் பயிற்சியில் சந்தித்தபோது கூறினார்.
முன்னதாக, நிகழ்ச்சியில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அனைத்து மாவட்ட அதிகாரிகளிடமும் இந்த தற்காலிக கூடாரங்களை ஒப்படைத்தார்.
முன்னதாக, தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) சிலாங்கூரில் உள்ள எட்டு மாவட்டங்கள் வெள்ள அபாயம் மிகுந்தவை என்று அடையாளம் கண்டுள்ளது.
கிள்ளான், பெட்டாலிங், கோம்பாக், உலு லங்காட், சிப்பாங், கோல லங்காட், சபாக் பெர்ணம் மற்றும் கோல சிலாங்கூர் ஆகியவையே அம்மாவட்டங்களாகும்.
இம்மாதம் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மழை வெள்ளம், புயல் மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடும் கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் முழு தயார் நிலையில் இருக்குமாறு அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.


