ஷா ஆலம், செப் 30- புக்கிட் லாகோங் பகுதியில் குவாரி எனப்படும் சுரங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மாநிலத்தில் கடந்த 2008 முதல் வனப்பகுதியின் பரப்பளவு 3.5 விழுக்காடு அதிகரித்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டில் 241,568.30 ஹெக்டராக இருந்த காடுகளின் பரப்பளவு 2021 ஆம் ஆண்டில் 250,250.33 ஹெக்டராக அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.
இக்காலக்கட்டத்தில் மாநிலத்தில் காடுகளின் பரப்பளவு 6,862 ஹெக்டர் அதிகரித்துள்ளது. இது தவிர, குவாரி நடவடிக்கைகள் தொடங்கப்படுவதற்கு முன் சுற்றுச்சூழல் இடர் மதிப்பீடு (இ.ஐ.ஏ.) மற்றும் குவாரி திட்ட மதிப்பீடு மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
இந்த நிபந்தனைகள் மீறப்படாமலிருப்பதை உறுதி செய்யும் பணியில் வன இலாகாவும் இதர துறைகளும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
வரும் 2030ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தில் பாதுகாக்கப்பட்ட காடுகளின் பரப்பளவை 33.3 விழுக்காடாக அதிகரிக்க மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஹீ லோய் சியான் கடந்த பிப்ரவரி மாதம் கூறியிருந்தார்.
தற்போது மாநிலத்தில் 32.5 விழுக்காடு காடுகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


