கிள்ளான், செப் 30- அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு செந்தோசா சட்டமன்ற தொகுதிக்கு 100 வெள்ளி மதிப்பிலான 650 ஜோம் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த பற்றுச் சீட்டுகளை தொகுதி சேவை மையம் வாயிலாக தகுதியானவர்களுக்கு விநியோகிக்கும் பணியில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக அதன் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் கூறினார்.
கடந்தாண்டு எங்களுக்கு 900 பற்றுச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டன. எனினும், இம்முறை அந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டு விட்டது. இருப்பினும் இந்த பற்றுச் சீட்டுகளுக்கான விண்ணப்பங்கள் இன்னும் வரவேற்கப்படுகின்றன. வசதி குறைந்தவர்கள் தொகுதி அலுவலகத்திற்கு வந்து இப்பற்றுச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.
இந்த தீபாவளி திருநாளின் போது அமல்படுத்தப்படவுள்ள ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடை எனும் திட்டத்தின் வழி 500 சிறார்களுக்கு ஆடைகள் வழங்கப்படும் என்றத் தகவலையும் அவர் வெளியிட்டார்.
செந்தோசா தொகுதி மற்றும் அரசு சாரா அமைப்பின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படும் இந்த இயக்கத்தின் வழி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறார் ஒரு ஜோடி உடைகளைப் பெறுவார் என்றார் அவர்.
கடந்தாண்டுகளைப் போலவே இவ்வாண்டும் தொகுதி மக்களுக்காக திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் என்றத் தகவலையும் அவர் வெளியிட்டார்.


