கிள்ளான், செப் 29- ஷா ஆலம், செக்சன் 18இல் அமைந்துள்ள ஸ்ரீ மகா படபத்தர காளியம்மன் ஆலயத்தை பக்தர்கள் நுழையாவண்ணம் வேலியிட்டு மறைந்த நில உரிமையாளரான கே.பி.ஜே. நிபுணத்துவ மருத்துவமனை நிர்வாகத்தின் செயலை இந்திய சமூகத்திற்கான சிலாங்கூர் மந்திரி புசாரின் சிறப்பு அதிகாரி டாக்டர் ஜி.குணராஜ் வன்மையாக கண்டித்தார்.
இந்துக்களின் சமய உணர்வைப் புண்படுத்தும் வகையிலும் மனிதாபமற்ற முறையிலும் கே.பி.ஜே. நிர்வாகம் இந்நடவடிக்கையை மேற்கொண்டது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று அவர் சொன்னார்.
இவ்விவகாரத்தில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான நவராத்திரி கொண்டாடப்பட்டு வரும் வேளையிலும் விரைவில் தீபாவளி பெருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையிலும் ஆலயத்தை வேலியிட்டு மறைக்கும் அடாதச் செயலை அந்நிறுவனம் புரிய வேண்டுமா என்பதே எனது கேள்வியாகும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
ஆலயத்தை அகற்ற வேண்டும் என அளிக்கப்பட்ட தீர்ப்பை ஸ்ரீ மகா படபத்தர காளியம்மன் ஆலய நிர்வாகம் பின்பற்றத் தவறியதாகக் கூறி ஷா ஆலம் உயர்நீதிமன்றம் ஆலயச் செயலாளர் கே.பத்மநாபனுக்கு கடந்த ஆகஸ்டு 25 ஆம் தேதி சிறைத்தண்டனை விதித்தது.
எனினும், ஆலயத்தை அங்கேயே நிலை நிறுத்துவதற்கு ஏதுவாக கே.பி.ஜே, நிறுவனத்திற்கு மாற்றும் நிலத்தை வழங்க மாநில அரசு உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து சிறைத்தண்டனையை அனுபவிப்பதிலிருந்து பத்மாநபனுக்கு நீதிமன்றம் விலக்களித்தது. ஆயினும் ஆலயத்தை வேலியிட்டு மறைக்கவும் தினசரி ஒருவர் மட்டுமே ஆலயத்திற்கு செல்லவும் கே.பி.ஜே. நிறுவனம் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது என்று குணராஜ் கூறினார்.
இந்த விஷயத்தில் கே.பி.ஜே நிர்வாகம் ஆலயத் தரப்பிடம் பரிவுடன் நடந்திருக்கலாம். உடனடியாக வேலிபோட வேண்டிய அவசியம் இல்லை. தற்போதைக்கு எந்த மேம்பாடும் அங்கு நடைபெறவில்லை.
மாநில அரசு பரிந்துரைத்தப்படி மாற்று நிலத்தைப் பெற்றுக் கொள்ள ஒப்புக் கொண்ட அந்நிறுவனம் ஆலயத்தை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. நான்காயிரம் சதுர அடி நிலத்தில் எந்த வகையான மேம்பாட்டுத் திட்டத்தை அந்த மருத்துவமனை நிர்வாகம் கொண்டு வரப் போகிறது என்று தெரியவில்லை என குணராஜ் சொன்னார்.
கே.பி.ஜே. நிர்வாகத்தின் இச்செயல் இந்துக்கள் மத்தியில் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


