கோலாலம்பூர், செப் 29- நாட்டிலுள்ள பல மாவட்டங்களில் சிறார் கடத்தல் சம்பவங்கள் நிகழ்வதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் பொய்யானவை என்று போலீசார் தெளிவுபடுத்தியுள்ளனர்.
சோலாக் மற்றும் தங்காக்கில் உள்ள பள்ளிகளில் மாணவர்களிடம் புத்தகம் விற்கும் பாவனையில் வந்த ஐந்து கடத்தல்காரர்கள் பெரோடுவா கஞ்சில் காரில் ஏறுவது கண்டறியப்பட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இத்தகைய தகவல் பகிரப்பட்டு வருவதாக தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். முகமது பாட்ஹில் மின்ஹாட் கூறினார்.
எனினும், தாங்கள் மேற்கொண்ட சோதனையில் அத்தகைய சிறார் கடத்தல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
இதனிடையே, இவ்விவகாரம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பத்திட், புக்கிட் ரம்பாய் பகுதியில் சிறார் கடத்தல் சம்பவம் நிகழ்ந்ததாக வாட்ஸ்ஆப் புலனம் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக பரவிய தகவல் தொடர்பில் தாங்கள் இதுவரை எந்த புகாரையும் பெறவில்லை என்றார்.
சிறார் கடத்தல் தொடர்பில் பகிரப்படும் குரல் பதிவு பொய்யானது எனக் கூறிய அவர், இதுபோன்ற அடிப்படையற்ற செய்திகளை நம்ப வேண்டாம் என பொது மக்களை கேட்டுக் கொண்டார்.
மெந்தகாப்பில் உள்ள வீடமைப்பு பகுதியில் சிறார் கடத்தல் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பேஸ்புக் பதிவில் வெளியான தகவலில் உண்மை இல்லை என்று தெமர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது அஸார் முகமது யூசுப் தெரிவித்தார்.
கோல லங்காட்டில் 17 வயது மாணவியைக் கடத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவலை கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். அகமது ரிட்வான் முகமது நோர் சாலே மறுத்துள்ளார்.
இச்செய்தி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அத்தகைய கடத்தல் சம்பவம் எதுவும் நிகழவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.


