பெட்டாலிங் ஜெயா, செப் 29- ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்கள் இனியும் நாட்டை ஆளக்கூடாது என்ற தனது நிலைப்பாட்டை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று மீண்டும் வலியுறுத்தினார்.
இத்தகைய தவறான செயல்களில் முற்றாக நிராகரிக்கும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நடவடிக்கையில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவருமான அவர் சொன்னார்.
நாட்டை ஊழலை எதிர்ப்பவர்கள், கர்வமும் தற்பெருமையும் இல்லாதவர்கள், தலைக்கனம் மற்றும் ஆணவம் இல்லாதவர்கள்தான் ஆட்சி புரிய வேண்டும் என மக்களை எப்படி நம்ப வைப்பது? இதைத்தான் நாங்கள் முயன்று வருகிறோம். அனைவரும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் யார்தான் இதனை ஆதரிக்கிறார்கள் என்பதை காண விரும்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள ஹில்டன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற கோலாலம்பூர் ஊடகவியலாளர் கிளப் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் கெஅடிலான் கட்சித் தலைவருமான அவர் இதனைத் தெரிவித்தார்.
கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அம்னோ தலைவர்களுடன் தாம் இன்னும் கொண்டிருக்கும் அணுக்கமான நட்பு கெஅடிலான் உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதையும் அன்வார் ஒப்புக் கொண்டார்.
முகமது அஸ்மினை இப்போது சந்தித்தால்கூட வழக்கம் போல் அவரை கடிந்து கொள்வேன். குடும்பம், பிள்ளைகளின் நலன் குறித்து விசாரிப்பேன். சில வேளைகளில் பிடிக்காத நண்பர்களாக இருந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் இதனைச் செய்தாக வேண்டியுள்ளது என்றார் அவர்.
டத்தோஸ்ரீ நஜிப் விஷயமும் இப்படித்தான். காண்டீன் சென்றால் “பாருங்கள், இவர்தான் கொள்ளையர்“ என எள்ளி நகையாடுகிறார்கள். அவர் ஏற்படுத்திய இழப்புகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் நாம் மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டியுள்ளது என்று அவர் சொன்னார்.


