ஷா ஆலம், செப் 29- வரும் அக்டோபர் 6 முதல் 9 வரை நடைபெறும் சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்ச நிலை மாநாட்டை (சிப்ஸ்) தங்கள் பகுதியிலுள்ள தொழில்பேட்டைகளைப் முதலீட்டாளர்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்கான தளமாக பயன்படுத்த செலாயாங் நகராண்மைக் கழகம் (எம்.பி.எஸ்.) திட்டமிட்டுள்ளது.
நகராண்மைக் கழகப் பகுதியில் பல தொழில்பேட்டைப் பகுதிகள் செயல்பட்டு வரும் வேளையில் மேலும் சில பகுதிகள் தற்போது மேம்படுத்தப்பட்டு வருவதாக நகராண்மை கழகத் தலைவர் முகமது யாஷிட் சைரி கூறினார்.
கோத்தா புத்ரி தொழில்பேட்டை, பிளாட்டினம் ரவாங், நியுட்டிக்கல் தொழில்பேட்டை, செக்சன் 10, கோத்தா புத்ரி, ரவாங் பூஃட் இண்டஸ்ட்ரிஸ் பார்க், சௌஜானா டெக்னோலோஜி ரவாங் மற்றும் தாமான் வேலோக்ஸ் ஆகியவையும் அத்தொழில்பேட்டைகளில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த சிப்ஸ் மாநாட்டையொட்டி நடைபெறவிருக்கும் சிலாங்கூர் தொழிலியல் பூங்கா கண்காட்சி (ஸ்பார்க்) மற்றும் சிலாங்கூர் இலக்கவியல் பொருளாதாரம் மற்றும் விவேக நகர மாநாடு (எஸ்.டி.இ.சி.) ஆகியவற்றிலும் இந்த தொழில்பேட்டைகளைப் பிரபலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நாம் சிப்ஸ் மாநாட்டுடன் இணைந்து செயலாற்றி வருகிறோம். இந்த மாநாட்டின் வாயிலாக எம்.பி.எஸ். கீழுள்ள பகுதிகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்றார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை பிரபலப்படுத்துவதற்கும் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் இந்த மாநாடு பெரிதும் துணை புரிகிறது என்று அவர் சொன்னார்.


