கோலாலம்பூர், செப் 29- விமானங்களில் முகக் கவசம் அணிவது இனி கட்டாயமல்ல என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை நேற்று தொடங்கி அமலுக்கு வருவதாகவும் அது கூறியது.
விமானங்களில் தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்டது மற்றும் நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது போன்ற அம்சங்களைக் கருத்தில் கொண்டு இந்த அணுகுமுறை கடைபிடிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
விமானத்தில் நல்ல காற்றோட்ட வசதி, காற்றில் கலந்துள்ள மாசுபாடுகளை வெளியேற்றும் திறன் கொண்ட சிறப்பான காற்று வடிகட்டும் முறை, முன்னோக்கிய இருக்கை வரிசை அமைப்பு முறை, அடிக்கடி கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கை ஆகியவையும் இவ்விகாரத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.
காய்ச்சல், சளி, மற்றும் இருமல் உள்ளவர்கள், நோய்த் தாக்கம் அதிகம் உள்ள மூத்த குடிமக்கள், கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் தொடர்ந்து முகக் கவசம் அணிய ஊக்குவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் வெளியிட்ட சுகாதார பரிந்துரையின் அடிப்படையிலும் முகக் கவசம் மீதான தளர்வு அறிவிக்கப்படுகிறது என்றார் அவர்.
எனினும், விமானத்தில் முகக் கவசங்களை அணிவது தொடர்பான முடிவு சம்பந்தப்பட்டவர்கள் பயணம் மேற்கொள்ளும் நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளுக்கேற்ப மாறுபடும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.


