புத்ரா ஜெயா, செப் 27- வீடுகளில் இணைப்பைக் கொண்டுள்ள கழிவு நீரை அகற்றுவது மற்றும் டாங்கிகளில் உள்ள கழிவு நீரை அகற்றுவது ஆகிய சேவைகளுக்கான கட்டணம் அடுத்தாண்டு ஜனவரி முதல் தேதி மற்றும் இவ்வாண்டு அக்டோபர் முதல் தேதி மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது.
இவ்விரு கழிவு நீர் அகற்றும் சேவைக்கான கட்டணத்தை உயர்த்துவதற்கு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக சுற்றுச்சூழல் மற்றும் நீர் வள அமைச்சு கூறியது.
வீடுகளில் தனியாக அமைக்கப்பட்டிருக்கும் டாங்கிகளில் உள்ள கழிவு நீரை அகற்றுவதற்கான கட்டணம் 5.00 வெள்ளியிலிருந்து 8.00 வெள்ளியாக உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண முறை இவ்வாண்டு அக்டோபர் முதல் தேதி அமலுக்கு வருகிறது.
கழிவு நீர் குளத்துடன் இணைப்பைக் கொண்டுள்ள வீடுகளில் கழிவு நீர் அகற்றும் சேவைக்கு சிறிய அளவில் அதாவது மாதம் 2.00 கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. இந்த நடைமுறை அடுத்தாண்டு ஜனவரி முதல் தேதி நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.
மக்களின் சுமையைக் குறைக்கும் விதமாக இ-காசே திட்டத்தில் பதிந்து கொண்டவர்களுக்கு கட்டணக் கழிவு வழங்கப்படும் என்றும் அது தெரிவித்தது.
தற்போது 2.00 முதல் 8.00 வெள்ளியாக இருக்கும் இணைப்பைக் கொண்டுள்ள வீடுகளுக்கான சேவைக் கட்டணம் இனி 17 வெள்ளியாக உயர்வு காணும். அதே சமயம் டாங்கிகளில் உள்ள கழிவு நீரை சுத்தம் செய்வதற்கான கட்டணம் 2.00 முதல் 6.00 வெள்ளியிலிருந்து 22 வெள்ளியாக ஏற்றம் காணும் என்று அமைச்சு குறிப்பிட்டது.


