உலு சிலாங்கூர், செப் 24- சிலாங்கூரில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள எட்டு வீடமைப்புத் திட்டங்களை மாநில அரசு அடையாளம் கண்டுள்ளதாக வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
அத்த்திட்டங்களுக்கு புத்துயிரூட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அவர், உலு சிலாங்கூரில் அடிப்படை வசதிகளை உள்ளடக்கிய நான்கு திட்டங்களும் அதில் அடங்கும் என்றார்.
அத்திட்டங்கள் கம்போங் கோஸ்கான், கம்போங் மிலாயு ராசா, லெம்பா பிரிங்கின், செரண்டா பெர்டானா ஆகிய இடங்களில் அமைந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
இறைவன் அருளால் அந்த நான்கு திட்டங்களுக்கும் தீர்வு காண வழி ஏற்பட்டுள்ளது. விரைவில் அதன் பலனை எதிர்பார்க்க முடியும் என்றார் அவர்.
குத்தகையாளரை கிராம பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு செயல்குழுக்கள் தேர்ந்தெடுக்கும் முந்தைய நடைமுறை காரணமாக இந்த குளறுபடிகள் ஏற்பட்டதாக கூறிய அவர், இத்தகைய சம்பவங்களை வருங்காலத்தில் ஒரு படிப்பினையாகக் கொள்ள வேண்டும் என்றார்.
அந்த குத்தகையாளர்கள் சாலை போன்ற அடிப்படை வசதிகளைக் கவனத்தில் கொள்ளலாமல் வீடுகளை மட்டுமே கட்டினர். இதனால் வீடு வாங்கியோர் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தனர். ஆகவே, தற்போது எளிதான முறையில் தயாராகக் கூடிய சிலாங்கூர் கூ வீடுகளை நாம் நிர்மாணிக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
முன்பு நாம் நிலத்தை வழங்குவோம். கிராம பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக செயல்குழு குத்தகையாளரை தேர்ந்தெடுக்கும். கடந்த 2008 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்த நடைமுறையை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டோம் என அவர் மேலும் சொன்னார்.


