உலு சிலாங்கூர், செப் 23- இருபது ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் கம்போங் கோஸ்கான் திட்டத்தின் வெளிப்புற அடிப்படை வசதிகள் 51 லட்சம் வெள்ளி செலவில் மறுசீரமைப்பு செய்யப்படும்.
இந்த மறுசீரமைப்பு திட்டத்தை சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியம் கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்ட நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் என்று வீடமைப்பு மற்றும் நல்வாழ்வுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
இந்த திட்டம் நிலச் சீராக்கம், நிலத்தை வலுப்படுத்தும் பணிகள், வடிகால், கழிவு நீர் திட்டம், மின் இணைப்பு உள்ளிட்ட பணிகளை உள்ளடக்கியுள்ளது என்று அவர் சொன்னார்.
இந்த சீரமைப்புப் பணிகள் கடந்த மே மாதம் 14 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு வரும் நவம்பர் 14 ஆம் தேதி முற்றுப் பெறும் என அவர் தெரிவித்தார்.
சுமார் 11.2 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள 43 பங்களா வீடுகளை உள்ளடக்கிய பகுதியில் இந்த சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் அந்த மேம்பாட்டுப் பகுதியை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த வீடமைப்புத் திட்டத்திற்கு புத்துயிரூட்டுவதற்கு மாநில ஆட்சிக்குழு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி ஒப்புதல் வழங்கியதாகவும் அதற்கான நிதி ஓராண்டு கழித்து அங்கீகரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் மற்றும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக சீரமைப்புப் பணிகள் இவ்வாண்டில்தான் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது வரை 62 விழுக்காட்டு பணிகள் பூர்த்தியடைந்துள்ளன என்று அவர் சொன்னார்.


