ஷா ஆலம், செப் 23- சிலாங்கூர் அரசு தன்னிடம் உள்ள வளங்களை மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வுத் திட்டத்தை தொடக்கியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் வளங்கள் பொது மக்களுடன் குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருடன் சமமாக பகிர்ந்து கொள்ளப்படும்.
இதற்கு முன்னர் அன்னையர் பரிவு உதவித் திட்டம் (கிஸ்) மற்றும் தனித்து வாழும் தாய்மார்களுக்கான கிஸ் ஐ.டி. திட்டம் ஆகியவற்றின் மூலம் மாதம் 200 வெள்ளி அல்லது ஆண்டுக்கு 2,400 வெள்ளியை மாநில அரசு உதவித் தொகையாக வழங்கி வந்தது.
தொடர்ந்து அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தைக் கருத்தில் கொண்டு பிங்காஸ் என்ற பெயருடன் மறுசீரமைப்பு செய்யப்பட்ட இத்திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்தாண்டு வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அறிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் தகுதி உள்ள தரப்பினருக்கு மாதம் 300 வெள்ளி அல்லது ஆண்டுக்கு 3,600 வெள்ளி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. இதில் பங்கேற்போரின் எண்ணிக்கையும் 21,000 பேரிலிருந்து 30,000 பேராக அதிகரித்துள்ளது.
மொத்தம் 10 கோடியே 80 லட்சம் வெள்ளி செலவில் இத்திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியதானது மக்களின் நலனைக் காப்பதில் மாநில அரசு கொண்டுள்ள கடப்பாட்டை பிரதிபலிப்பதாக உள்ளது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசாங்கம் தோல்வி கண்ட காரணத்தால் மக்கள் குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் தரப்பினரின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் அரசு ஒரு அடி முன்னோக்கிச் சென்று இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தரப்பினருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வருகிறது.


