ஷா ஆலம், செப் 22- மலேசிய தினத்தை முன்னிட்டு இம்மாதம் 18ஆம் தேதி கான்வாய் மெர்டேக்கா பங்கேற்பாளர்கள் பந்தாய் ரெமிஸ் கடற்கரையில் மேற்கொண்ட துப்புரவு இயக்கத்தில் 100 கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கையின் போது நெகிழிப்பைகள், அலுமினிய டின்கள், குடிநீர் போத்தல்கள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக பிரித்தெடுக்கப்பட்டதாக டீம் சிலாங்கூர் செயலகத் தலைவர் ஷியாய்ஸால் கெமான் கூறினார்.
பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்புரவு இயக்கத்தில் புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளியும் கலந்து கொண்டதாக அவர் சொன்னார்.
இத்தகைய நடவடிக்கைகள் பொழுதை முறையாக செலவிடுவதற்கும் குடும்ப உணர்வை வளர்ப்பதற்கும் உதவும் அதே வேளையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் துணை புரிகிறது என்று ஜூவாய்ரியா தெரிவித்தார்.
சுற்றுச் சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில் இந்த தன்னார்வலர் குழு கடந்தாண்டு அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி துப்புரவு இயக்கங்களை மேற்கொண்டு வருகிறது.


