ஷா ஆலம், செப் 22- மாநில அரசின் ஏற்பாட்டிலான சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்துள்ளது. கடந்த மே மாதம் இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 45,000 பேர் இதில் பங்கேற்று பயனடைந்துள்ளனர்.
இம்மாதம் 11 ஆம் தேதியுடன் இந்த இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டம் முடிவுக்கு வந்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டி அதிகமானோர் இதில் பங்கேற்றுள்ளனர் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மொத்தம் 31 லட்சம் வெள்ளி ஒதுக்கீட்டில் மாநிலம் முழுவதும் நடத்தும் இந்த திட்டத்தின் மூலம் 31,00 பேர் வரை பயனடைவர் என முன்பு கணித்திருந்தோம் என்றார் அவர்.
இந்த பரிசோதனைத் திட்டத்தில் பங்கேற்றவர்களில் 4,809 பேர் தொடர் சிகிச்சை பெறுவதற்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுகாதார மற்றும் சமூக நல திட்டங்களுக்கு மாநில அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வரும் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.


