ஷா ஆலம், செப் 22- கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைத் தடுப்பை மோதிய சம்பவத்தில் பட்டமளிப்பு விழாவுக்கு சென்று கொண்டிருந்த ஐந்து மாணவிகள் காயங்களுக்குள்ளாயினர்.
இச்சம்பவம் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 396வது கிலோமீட்டரில் உலு பெர்ணம் அருகே இன்று அதிகாலை 5.30 மணியளவில் நிகழ்ந்தது.
இந்த விபத்தில் ஒரு மாணவி கடுமையான காயங்களுக்குள்ளான வேளையில் இதர நால்வருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோராஸாம் காமீஸ் கூறினார்.
இவ்விபத்து குறித்து அதிகாலை 5.35 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.
அந்த மாணவிகள் பயணம் செய்த புரோட்டோன் சாகா கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை மோதியது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விபத்தின் காரணமாக மாணவி ஒருவர் காரின் முன்புறம் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார். தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டனர் என்றார் அவர்.
இருபத்தோரு வயதுடைய அந்த ஐந்து மாணவிகளும் சிகிச்சைக்காக சிலிம் ரிவர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.


