கோல சிலாங்கூர், செப் 21- தீபாவளியை முன்னிட்டு புக்கிட் மெலாவத்தி தொகுதியைச் சேர்ந்த வசதி குறைந்த 450 இந்திய குடும்பங்களுக்கு பொருட்கள் வாங்குவதற்கான பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.
ஜோம் ஷோப்பிங் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 வெள்ளி மதிப்பிலான இந்த பற்றுச்சீட்டுகள் பெருநாளைக் கொண்டாடுவதில் வசதி குறைந்த குடும்பங்கள் எதிர்நோக்கும் பொருளாதார சுமையை ஓரளவு குறைக்கும் என்ற சட்டமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி முகமது ஃபர்ஹான் ஜூல்கிப்ளி கூறினார்.
வரும் அக்டோபர் 2 ஆம் தேதி கோல சிலாங்கூர் லோட்டஸ் பேரங்காடியில் இந்த பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும். இந்த திட்டத்தில் பங்கேற்க தகுதியுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு விட்டனர் என்று அவர் தெரிவித்தார்.
புக்கிட் மெலாவத்தி தொகுதியில் வசிப்பவர்களாகவும் மாதம் 2,000 வெள்ளிக்கும் குறைவான வருமானம் பெற கூடியவர்களாகவும் இந்த உதவியை ஏற்கனவே பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும என்பது இதற்கான நிபந்தனையாகும் என்று அவர் சொன்னார்.
மாநில மக்களின் நலன் மற்றும் சுபிட்சத்தை நீண்ட கால அடிப்படையில் காக்கும் நோக்கில் குறைந்த வருமானம் பெறும் தரப்பினரை இலக்காக கொண்டு மாநில அரசு இந்த ஜோம் ஷோப்பிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


