ஷா ஆலம், செப் 14- நாட்டில் தினசரி கோவிட்-19 நோய்த்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து ஐந்து நாட்களாக 2,000க்கும் கீழ் பதிவாகி வருகிறது.
நேற்று 1,942 பேர் இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட வேளையில் அவற்றில் 9 சம்பவங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் மூலம் பரவியவை என்று சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.
கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி 1,990 சம்பவங்களும் 10 ஆம் தேதி 1,971 சம்பவங்களும் 11 ஆம் தேதி 1,483 சம்பவங்களும் 12 ஆம் தேதி 1,847 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இந்த புதிய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 48 லட்சத்து 8 ஆயிரத்து 896 ஆக உயர்ந்துள்ளது அவற்றில் 25,693 சம்பவங்கள் தீவிர பாதிப்பைக் கொண்டவையாக உள்ளன.
நேற்று மேலும் ஆறு இறப்புகள் பதிவாகியுள்ளன. தொற்றுநோயால் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 36,291 ஆக அதிகரித்துள்ளது.


