பெட்டாலிங் ஜெயா, செப் 14- பருவநிலை அவசரகாலத்தைப் பிரகடனப்படுத்துவது குறித்து சிலாங்கூர் அரசு பரிசீலித்து வருகிறது. பேரிடர் தொடர்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிபுணர்கள் அளிக்கும் தரவுகள் மற்றும் ஆய்வறிக்கையின் அடிப்படையில் இது குறித்து முடிவெடுக்கப்படும்.
ஜப்பானிய அனைத்துலக ஒத்துழைப்பு நிறுவனத்துடன் இணைந்து மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் கடந்த 2019 முதல் மேற்கொண்டு வரும் ஆய்வின் முடிவுகள் இவ்வாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இதன் தொடர்பான பூர்வாங்க அறிக்கையை நாம் பெற்றுள்ளோம். பருவநிலை அவசரகாலத்தை பிரகடனப்படுத்துவது குறித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், நிபுணர்களின் தரவுகள் மற்றும் ஆய்வுகள் இன்றி அது குறித்த அறிவிப்பை வெளியிட முடியாது என்றார் அவர்.
இந்த அறிக்கை கிடைத்தவுடன் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளை கையாள்வதில் நாம் கவனம் செலுத்தவுள்ளோம். கடல் நீர் மட்டம் உயரும் காரணத்தால் கடலோரப் பகுதிகள் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவதற்குரிய அபாயம் உள்ளது என அவர் கூறினார்.
நேற்று இங்கு பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் காஃபி டேபிள் புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக, பேரிடர் சமயங்களில் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக பருவநிலை அவசரகாலத்தை பிரகடனப்படுத்தும்படி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ மாநில அரசைக் கேட்டுக் கொண்டார்.


