சபாக் பெர்ணம், செப் 14- கடந்த மே மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிகிஞ்சான் தொகுதியைச் சேர்ந்த மொத்தம் 515 பேர் தலா 300 வெள்ளி உதவித் தொகையை நேற்று பெற்றுக் கொண்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மாநில அரசு 104,000 வெள்ளியை வழங்கிய வேளையில் மேலும் 50,800 வெள்ளியை எம்.பி.ஐ.எனப்படும் மந்திரி புசார் (ஒருங்கிணைக்கப்பட்ட) கழகம் வழங்கியது என்று சிகிஞ்சான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
கடந்த மே மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை 415 குடும்பங்களுக்கும் 100 வணிகர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது என்றார் அவர்.
உதவி நிதி சுற்றறிக்கையின் படி குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும். எனினும், மந்திரி புசார் மற்றும் எம்.பி.ஐ.யிடம் நான் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் 100 வணிகர்களும் இந்த உதவித் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டதோடு கூடுதலாக 50 வெள்ளியும் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
இங்குள்ள டேவான் சிகிஞ்சானில் நேற்று நடைபெற்ற வெள்ள நிவாரண நிதி வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.


