ஷா ஆலம், செப் 14- மத்திய அரசாங்கத்திற்கும் பக்கத்தான் கூட்டணிக்கும் இடையே ஓராண்டிற்கு முன்னர் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்த த்தின் 83 விழுக்காட்டு அம்சங்கள் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன.
அந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் வாயிலாக ஏழு விஷயங்களில் நாம் வெற்றி கண்டதானது அரசியல் சித்தாந்தங்களை விட மக்களின் நலனுக்கு பக்கத்தான் ஹராப்பான் முன்னுரிமை அளிப்பதை புலப்படுத்துவதாக உள்ளது என்று அந்த கூட்டணியின் தொடர்பு பிரிவு இயக்குநர் கூறினார்.
இந்த ஒப்பந்த த்தின் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடாத பட்சத்தில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு சாத்தியமே கிடையாது என அவர் குறிப்பிட்டார்.
கடந்தாண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி உருமாற்றம் மற்றும் அரசியல் நிலைத்தன்மைக்கான ஒப்பந்தத்தில் அரசாங்கமும் ஹராப்பான் கூட்டணியும் கையெழுத்திட்டதன் மூலம் நாட்டின் வரலாற்றில் புதிய அத்தியாயம் உருவாக்கப்பட்டது.
கட்சித் தாவல் தடைச் சட்ட அமலாக்கம், 18 வயதானவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை, பி50 தரப்பினருக்கு வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்துவதிலிருந்து தற்காலிக விலக்களிக்கும் மோரோட்டோரியம் சலுகை, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சம அந்தஸ்து, 1963 ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தம், நீதித் துறையின் சுதந்திரம் ஆகியவை அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள அம்சங்களாகும்.


