பத்து பகாட், செப் 13 - இங்குள்ள ஜாலான் பூடி உத்தாரா, தாமான் வாவாசான் என்ற இடத்தில் சட்டவிரோத பிட்காயின் சுரங்க நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு வளாகங்களில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் சுமார் 204,000 வெள்ளி மதிப்புள்ள பல்வேறு உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காவல்துறையினரும் தெனாகா நேஷனல் பெர்ஹாட் (டிஎன்பி) பணியாளர்களும் நேற்று காலை 11.00 மணியளவில் பூட்டப்பட்டிருந்த அந்த வளாகத்தில் அதிரடிச் சோதனை நடத்தியதாக பத்து பகாட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி இஸ்மாயில் டோலா கூறினார். கூறினார்.
திருட்டுத்தனமாக மின்சாரத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட பிட்காயின் சுரங்க நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்ளவர்களைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இச்சோதனையின் போது அந்த வளாகத்தில் யாரும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இச்சோதனையின் போது அந்த மையத்தில் இருந்த 204 மைனிங் ஆன்ட்மினர் இயந்திரங்கள், 11 போர்ட் சுவிட்சுகள், இரண்டு கணினி மானிட்டர்கள், இரண்டு சிபியுக்கள் மற்றும் இரண்டு ரூட்டர்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட உபகரணங்களின் மதிப்பு சுமார் 204,000 வெள்ளியாகும் என்றார் அவர்.


