ஷா ஆலம், செப் 13- மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் தவிர்த்து பாரிசான் அரசாங்கம் காப்பாற்றத் தவறிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது மாநில அரசாங்கம்.
பாரிசான் அரசாங்கத் காக்கத் தவறிய வாக்குறுதிகளில் 1995 ஆம் ஆண்டு மாநில கால்பந்து குழுவுக்கு நிலம் வழங்குவதாக அளித்த வாக்குறுதியும் ஒன்றாகும் என்று மந்திர புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இது தவிர, ஆறு மந்திரி புசார்கள் மாறிய போதிலும் கடந்த 26 ஆண்டுகளாக தீர்வு காணப்படாமலிருந்த கோல சிலாங்கூர், தாமான் யூ இண்டா வீடமைப்பு பிரச்னையும் இதில் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.
எனினும், 26 ஆண்டுகால காத்திருப்புக்குப் பின்னர் சம்பந்தப்பட்ட வீடமைப்புத் திட்டத்தில் வீடு வாங்கிய 107 குடும்பங்களுக்கு மாநில பக்கத்தான் ஹராப்பான் அரசு நேற்று சாவிகளை ஒப்படைத்தது என அவர் சொன்னார்.
நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் அதே வேளையில் முந்தைய அரசாங்கம் காப்பாற்றாது கைவிட்ட வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறோம் என அவர் தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம், கடந்த 1995 ஆம் ஆண்டில் மலேசிய கிண்ணத்தை வென்ற சிலாங்கூர் விளையாட்டாளர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய 31 பேருக்கு காஜாங் 2, பகுதியில் ரூமா இடாமான் வீடுகளை மாநில அரசு வழங்கியது.
அப்போட்டியில் வென்ற சிலாங்கூர் அணியினருக்கு தலா 0.4 ஹெக்டர் நிலம் வழங்கப்படும் என்று அப்போதைய சிலாங்கூர் மந்திரி புசார் டான்ஸ்ரீ முகமது முகமது தாயிப் வாக்குறுதியளித்திருந்தார். எனினும் அந்த வாக்குறுதியை அப்போதைய அரசாங்கம் காப்பாற்றவில்லை.


