ஷா ஆலம், செப் 13- கிள்ளான் மற்றும் கோல சிலாங்கூர் வட்டாரத்தில் கடந்த மூன்று தினங்களாக நீடித்து வரும் கடல் பெருக்கு சிறப்பான வானிலை காரணமாக கட்டுப்பாட்டில் உள்ளது.
மீனவ கிராமங்கள் மற்றும் கோலக் கிள்ளானில் கடல் அலை 5.4 மீட்டர் வரை எழும்பிய போதிலும் சிறிய அளவில் மட்டுமே நீர் பெருக்கு ஏற்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கூறியது.
சில இடங்களில் கடல் நீர் கரையைக் கடந்தது. குறுகிய நேரத்தில் நீர் வடிந்த காரணத்தால் பொது மக்கள் யாரும் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படவில்லை என்று மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோராஸாம் காமீஸ் கூறினார்.
இந்த கடல் பெருக்கினால் அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க கிள்ளான் மற்றும் கோல சிலாங்கூரிலுள்ள பத்து தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 100 வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஏழு நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் கடல் பெருக்கினால் கிள்ளான் மாவட்டத்தில் 62 இடங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் என முன்னதாக கணிக்கப்பட்டிருந்தது.
இம்மாத 27 முதல் 29 வரையிலும் இந்நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது 5.4 மீட்டர் வரை கடல் அலை உயரும் என கூறப்பட்டுள்ளது.


