கிள்ளான், செப் 13: வடகிழக்கு பருவமழை இம்மாதம் மத்தியில் தொடங்கி டிசம்பர் மாதம் வரை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் மாவட்டத்தில் மொத்தம் 62 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சுங்கை செர்டாங், தோக் மூடா, புலாவ் இண்டா மற்றும் தெலோக் கோங் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் 10,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை இந்த நிலைமை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கிள்ளான் மாவட்ட அதிகாரி ஷாமான் ஜலாலுடின் தெரிவித்தார்.
“கனமழையுடன் கடல் நீர்மட்டம் உயரும் போது வெள்ளம் ஏற்படும். இன்றும், நேற்றும் என்று பார்த்தால், (பெரும் அலை) இருந்தாலும் நிலைமை கட்டுக்குள் உள்ளது.
"எங்கள் ஒரே கவலை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், அந்த நேரத்தில் மழை பெய்தால், வெள்ள ஆபத்து அதிகமாக இருக்கலாம்," என்று அவர் இன்று காப்பார், பான் பெங்காலான் தோக் மூடாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
முன்னதாக, ஷாமான், கிள்ளான் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (ஜேபிஎஸ்) பொறியாளர் அகமது பௌசன் முகமட் சப்ரி ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ள சில பகுதிகளுக்குச் சென்றனர்.
இதற்கிடையில், கிள்ளான் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவரான அவர், அதிகாரிகள் வெளியிடும் வெள்ளம் குறித்த அறிக்கைகள் மற்றும் தகவல் குறித்து குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில், தேவையற்ற அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்கு வெள்ளம் ஏற்பட்டால் பாதுகாப்பான இடத்திற்கு செல்வதற்கு வழிகாட்டல் மற்றும் அறிவுறுத்தல்களை குடியிருப்பாளர்கள் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஒவ்வொரு துறையிலும் பல இயக்க அறைகள் உள்ளன, "உங்களுக்கு சமீபத்திய தகவல் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்பு கொள்ளலாம். வெள்ள முன்னெச்சரிக்கை காரணமாக இடமாற்றம் செய்ய உத்தரவு கிடைத்தால் உடனடியாக மாறி செல்ல குடியிருப்பாளர்களை கேட்டுக்கொள்கிறோம்.
"ஏனென்றால், சில நேரங்களில் பல்வேறு காரணங்களுக்காக நகர மறுக்கும் குடியிருப்பாளர்கள் உள்ளனர்," என்று அவர் மேலும் கூறினார்.
சிலாங்கூர் தென்மேற்குப் பருவக் காற்றில் இருந்து வடகிழக்குப் பருவக்காற்றுகு மாற்றத்தை எதிர்கொள்ளும் என்று மலேசிய வானிலை ஆய்வு திணைக்களம் கணித்துள்ளது, இந்த மாற்ற காலம் முழுவதும் மழை பொய்தல் 100 முதல் 400 மில்லி மீட்டர்கள் (மிமீ) வரை இருக்கும்.
தேசிய ஹைட்ரோகிராஃபிக் மையம், புலாவ் இண்டா, கிள்ளான் வழங்கிய கணிப்புகளின் அடிப்படையில், கடல் மட்டம் 5.5 மீட்டரை வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் கடல் நீர் குடியேற்றப் பகுதிக்குள் புகும் வாய்ப்பு உள்ளது.


