பேங்காக், செப் 13- தாய்லாந்து-மியன்மார் எல்லையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த மே மாதம் மரணமடைந்த நபர் வேலை வாய்ப்பு மோசடிக் கும்பலால் ஏமாற்றப்பட்ட கோய் ஸென் ஃபெங் என்ற மலேசியர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவ்வாடவரின் சடலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட டி.என்.ஏ. எனப்படும் மரபணு சோதனையில் இந்த உண்மை தெரிய வந்தது. கோவின் மரபணுவும் அவரின் தந்தையின் மரபணுவும் 99.99 விழுக்காடு ஒத்துப்போவதை காட்டும் டி.என்.ஏ. அறிக்கை நேற்று மாலை 4.00 மணியளவில் பெறப்பட்டது.
தாய்லாந்தில் இந்த டி.என்.ஏ. மரபணு சோதனையை மேற்கொள்வதில் பகாங் மாநிலத்தின் தெருந்தோங் சட்டமன்ற உறுப்பினர் சிம் சூன் சியாங் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு பெரிதும் உதவி புரிந்தார்.
மரபணு சோதனை முடிந்த நிலையில் கோய் ஸென்னின் உடல் தகனம் செய்யப்படும் என்று சிம் தெரிவித்தார்.
கோய் ஸென்னின் அஸ்தியை அவரது குடும்பத்தினர் வரும் வெள்ளி அல்லது சனிக்கிழமை ஈப்போவிலுள்ள தங்கள் இல்லத்திற்கு கொண்டு வருவர் என அவர் குறிப்பிட்டார்.
மியன்மாரில் வேலை வாங்கித் தருவதாக கூறிய கும்பலிடம் கோய் ஏமாந்ததாக கூறப்படுகிறது. மியன்மார் சென்ற தங்கள் மகனைத் தேடி அவரின் பெற்றோர்கள் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி தாய்லாந்து சென்றனர்.


