குவாந்தான், செப் 9- நேற்று காலமான இரண்டாம் எலிசபெத் அரசியாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பகாங் மாநிலக் கொடி நாளை செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவின் உத்தரவின் பேரில் மாநிலக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படுவதாக மாநில அரசு செயலாளர் டத்தோஸ்ரீ சலாவுடின் இஷாக் கூறினார்.
பிரிட்டிஷ் வரலாற்றில் நீண்ட காலம் அரியணையில் அமர்ந்திருந்த எலிசபெத் அரசியார் நேற்று தனது 96வது வயதில் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்தது.
அரசியின் மறைவுக்கு அனைத்து பிரிட்டிஷ் மக்களுக்கும் காமன்வெல்த் பிரஜைகளுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக பகாங் மந்திரி புசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருந்தார்.


