ஷா ஆலம், செப் 9- சுபாங் ஜெயாவில் நடைபெறும் 2022ஆம் ஆண்டு சிலாங்கூர் வான் போக்குவரத்து கண்காட்சி (எஸ்.ஏ.எஸ்.) முதல் நாளான இன்று இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தகத் தொடர்புடைய வருகையாளர்களைப் பதிவு செய்தது.
ஸ்கைபார்க் வட்டார விமான மையத்தில் இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இந்த கண்காட்சிக்கு வருகை புரிந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக வருகையாளர்கள் இதன் ஏற்பாடு குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததாக இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஹசான் அஸ்ஹாரி கூறினார்.
வருகையாளர்களில் பெரும்பாலானோர் நேர்மறையான கருத்துகளை வெளியிட்டனர். கடந்தாண்டை விட அதிகமான வான் போக்குவரத்து நிறுவனங்கள் பங்கேற்ற இந்த கண்காட்சி முன்பை விட சிறப்பானதாக இருந்தது என்று அவர்கள் வர்ணித்தனர் என்றார் அவர்.
இந்த இரண்டு நாள் கண்காட்சியில் பல புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்தாகவுள்ளன. சிலாங்கூர் ஏவியேஷன் அண்ட் டெக்லோனோஜி இன்னோவேஷன்ஸ் சென். பெர்ஹாட் மற்றும் வோலார் மோபிலிட்டி இடையிலான ஒப்பந்தம், மலேசியா வான் விளையாட்டு சம்மேளனத்திற்கும் ஜியான் வான் அகாடமி மற்றும் டேவின்சி கிளைடர்ஸ்க்கும் இடையிலான ஒப்பந்தம் ஆகியவையும் அதில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
வான் போக்குவரத்து தொழில்துறையினருக்கு மேலும் வர்த்தக வாய்ப்புகளை விரிவுபடுத்துவது மற்றும் வான் போக்குவரத்து குறித்த புரிதலை பொதுமக்களிடம் ஏற்படுத்துவது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த வான் போக்குவரத்து கண்காட்சியை சிலாங்கூர் கடந்தாண்டு முதல் நடத்தி வருகிறது.


