கோலாலம்பூர், செப் 6- கெப்போங், பண்டார் மஞ்சாலாராவிலுள்ள நகைக் கடை ஒன்றில் கொள்ளையிட திட்டமிட்ட சந்தேகத்தின் இரு ஆடவர்களை போலீசார் கடந்த ஞாயிற்றுக் கிழமை கைது செய்தனர்.
வாகனங்களின் கண்ணாடிகளை உடைக்கும் குற்றச்செயல்களை கண்டுபிடிக்கும் நோக்கில் கெப்போங் போலீசார் அப்பகுதியில் இரவு 8.54 மணியளவில் ரோந்து பணியை மேற்கொண்டிருந்த போது இக்கும்பலின் திட்டம் அம்பலத்திற்கு வந்ததாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அஸ்மி அபு காசிம் கூறினார்.
அந்த ரோந்து பணியின் போது புரோட்டோன் வீரா காரில் 42 மற்றும் 43 வயதுடைய இரு ஆடவர்கள் இருப்பதை போலீசார் கண்டனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு அவர்களிடம் சோதனை மேற்கொண்டனர்.
அச்சோதனையின் போது அக்காரில் இரு கைத்துப்பாக்கிகளும் சில தோட்டாக்களும் காணப்பட்டன. மேலும் ஒரு சந்தேகப்பேர்வழியின் பாக்கெட்டில் 8 தோட்டாக்களும் மற்றொரு ஆடவன் பாக்கெட்டில் 10 தோட்டாக்களும் காணப்பட்டன என்றார் அவர்.
அவ்விரு சந்தேகப் பேர்வழிகளும் அருகிலுள்ள நகைக்கடை ஒன்றைக் கொள்ளையிட திட்டமிட்டிருந்ததாகவும் போலீசார் விரைந்து செயல்பட்டதால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
அச்சந்தேகப் பேர்வழிகளிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில் பழைய கிள்ளான் லாமா சாலையிலுள்ள வீடொன்றில் தாங்கள் சோதனை மேற்கொண்டு இக்கும்பலின் முக்கியப் புள்ளி என நம்பப்படும் 47 வயது ஆடவனையும் கைது செய்ததாக இன்று இங்குள்ள போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
அக்கும்பலிடமிருந்து 129,300 வெள்ளி ரொக்கம் மற்றும் 175,000 வெள்ளி மதிப்புள்ள நகைகளும் கைப்பற்றப்பட்டன என்றார் அவர்.


