ஷா ஆலம், செப் 6- சிலாங்கூர் புத்தாக்க நிதித் திட்டத்தின் கீழ் ஐந்து லட்சம் வெள்ளி முதல் பத்து லட்சம் வெள்ளி வரை முதலீட்டு மூலதன நிதியைப் பெறக்கூடிய கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள 150 நிறுவனங்கள் இறுதிப் பட்டியலிடப்படும்.
சம்பந்தப்பட்ட அந்நிறுவனங்களின் ஆற்றல் மற்றும் மூலதனத்தை அடிப்படையாக கொண்டு அந்நிறுவனங்களை மதிப்பிடும் பணியை பெர்மோடலான் நெகிரி சிலாங்கூர் பெர்ஹாட் (எ.என்.எஸ்.பி.) மற்றும் சிலாங்கூர் மாநில இலக்கவியல் பொருளாதார தொழில்நுட்ப கழகம் (சிடேக்) ஆகியவை மேற்கொள்ளும்.
தகுதி உள்ள தொடக்க நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு ஏதுவாக மூலதனத்தைக் கையாளக் கூடிய துணை நிறுவனத்தைக் கொண்ட முதல் மாநிலமாக சிலாங்கூர் விளங்குவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கோவிட்-19 நோய்த் தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு புத்துயிரூட்டுவதற்காக சிலாங்கூர் புத்தாக்க நிதியின் கீழ் 10 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்வது குறித்த அறிவிப்பை கடந்த 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது நான் வெளியிட்டிருந்தேன்.
அத்தொகையில் மூன்று கோடி வெள்ளி மூலதன உருவாக்க நிறுவனங்களுக்கு அதாவது ஒரு வர்த்தகத்தை அடையாளம் கண்டு இன்னும் செயல்படுத்தாத நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.
இன்று ஐ-சிட்டியில் உள்ள டபள் த்ரீ ஹோட்டலில் பி.என்.எஸ்.பி மற்றும் சிடேக் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


