ஷா ஆலம், செப் 6- போர்ட் கிள்ளான் சுற்றுலா கப்பல் முனையத்தை (பி.கே.சி.டி.) மேம்படுத்துவதில் மத்திய அரசுடன் மாநில அரசு ஒத்துழைக்கும்.
மேலும் அதிகமான சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதற்கு ஏதுவாக இப்பகுதி மேலும் பிரபலப்படுத்தப்பட வேண்டும் என்ற மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் வேண்டுகோளுக்கிணங்க மாநில அரசு இவ்விகாரத்தில் முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த பி.கே.சி.டி. முனையத்தை மேன்மை தங்கிய சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் அவரின் துணைவியார் தெங்கு பெர்மைசூரி நோராஷினின் நேற்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தனர்.
இந்த பி.கே.சி.டி. மையம் திறக்கப்பட்டதன் வழி சிலாங்கூர் மாநிலத்தில் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் அதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு நேர்மறையான விளைவுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு கிட்டும் என்று அமிருடின் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.
சுமார் 69.8 ஹெக்டர் நிலப்பரப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பி.கே.சி.டி.முனையம் சுற்றுலா கப்பல்கள் மற்றும் இராணுவக் கப்பல்களுக்கான முக்கிய துறைமுகமாக விளங்குகிறது.
முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட இந்த முனையத்தில் கப்பல்களில் ஏறும் மற்றும் இறங்கும் பயணிகளின் வசதிக்காக கூரையுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.


