ராய்ட்டர்ஸ், செப் 6- அமெரிக்க கடற்படை சம்பந்தப்பட்ட மிகப்பெரிய ஊழலில் சிக்கியுள்ள மலேசிய குத்தகையாளர் ஒருவர் வீட்டுக் காவலிலிருந்து தப்பினார்.
விரைவில் தண்டனை விதிக்கப்படவிருந்த அவர், தனது கணுக்காலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு சாதனத்தை வெட்டியெறிந்து விட்டு தப்பியதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
ஃபெட் லியோனெர்ட் என அழைக்கப்படும் ரியோர்னெட் கிளேன் பிரான்சிஸ் என்ற அந்த ஆடவர் கடந்த திங்கள்கிழமை காலை தனது கணுக்காலில் பொருத்தப்பட்டிருந்த அந்த ஜி.பி.எஸ். கண்காணிப்பை சாதனத்தை வெட்டியெறிந்து விட்டு தப்பியதாக சன்டியாகோ யூனியன்-டிரிபியூன் ஏடு தெரிவித்தது.
அதிகாரிகள் உடனடியாக அவரது வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்த போது அவ்வாடவர் தலைமறைவானது தெரிய வந்ததாக அமெரிக்க கண்காணிப்பு அதிகாரி மார்ஷெல் ஓமார் கெஸ்திலோ கூறினார்.
அமெரிக்க கடற்படையில் குத்தகை பெறுவதற்காக பிரான்சிஸ் கடற்படை அதிகாரிகளுக்கு ரொக்கம், ஆடம்பர விருந்து, விலையுயர்ந்த பொருள்கள் மற்றும் பெண்களை ஏற்பாடு செய்து தந்ததாக கூறப்படுகிறது.
வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி தண்டனை விதிக்கப்படவிருந்து பிரான்ஸ் மருத்துவ காரணங்களுக்காக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.


