ஷா ஆலம், செப் 5- இன்று விடியற்காலை ஏற்பட்ட தீவிபத்தில் கோல சிலாங்கூர் பெக்கான் லாமாவிலுள்ள 100 ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த ஐந்து இரட்டை மாடி கடை வீடுகள் முற்றாக அழிந்தன.
அதிகாலை 5.15 மணியளவில் ஏற்பட்ட இத்தீயில் காலியாக உள்ள இரு கடைகள், ஒரு துணிக் கடை, ஒரு வழிபாட்டு மையம் மற்றும் ஒரு மழைக்குருவி வளர்ப்பு கடை ஆகியவை பாதிக்கப்பட்டதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தீச்சம்பவம் குறித்த தகவல் அதிகாலை 5.15 மணியளவில் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் வீரர்கள் அடங்கிய 32 பேர் சம்பவம் இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோராஸாம் காமீஸ் கூறினார்.
இரு கடைகளில் ஏற்பட்டத் தீ பின்னர் மற்ற கடைகளுக்கும் பரவியது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறிய அவர். இச்சம்பவம் நிகழ்ந்த போது அந்த கடை வீடுகளில் யாரும் தங்கியிருக்கவில்லை என்றார்.
கோலா சிலாங்கூர், தஞ்சோங் காராங், பெஸ்தாரி ஜெயா, சிகிஞ்சான், சுங்கை பெசார் நிலையங்களிலிருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் அந்த ஐந்து கடைகளும் சுமார் 80 விழுக்காடு சேதமடைந்தன. தீக்கான காரணம் மற்றும் சேத மதிப்பு ஆராயப்பட்டு வருகிறது என்றார் அவர்.


