புத்ரா ஜெயா, செப் 2- வயது குறைந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக தமக்கு விதிக்கப்பட்ட எட்டு ஆண்டுச் சிறை மற்றும் ஐந்து பிரம்படிகளை ரத்து செய்யக் கோரி செய்து கொண்ட மேல் முறையீட்டில் தொழிற்சாலை ஊழியர் ஒருவர் வெற்றி கண்டார்.
தனக்கு எதிரான குற்றத் தீர்ப்பையும் தண்டனையையும் ரத்து செய்வதற்கு முகமது அர்ஃபஷ்யார் இஷாக் செய்த இறுதி மனுவை நீதிபதிகள் டத்தோ ஹாட்ஹாரியா சைட் இஸ்மாயில், டத்தோ நோர்டின் ஹசான், டத்தோ சீ மீ சுவான் ஆகியோரடங்கிய மேல் முறையீட்டு நீதிமன்ற அமர்வு ஏற்றுக் கொண்டது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் நம்பகமான சாட்சி இல்லை என்பதோடு விசாரணையின் போது அவர் அளித்த சாட்சியத்தில் முரண்பாடுகள் காணப்பட்டதைக் கருத்தில் கொண்டு குற்றஞ்சாட்டப்பட்ட நபரை குற்றச்சாட்டிலிருந்தும் தண்டனையிலிருந்தும் தாங்கள் விடுவிப்பதாக நீதிபதி ஹாட்ஹரியா தனது தீர்ப்பில் கூறினார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி கெடா மாநிலத்தின் பீடோங்கிலுள்ள ஹோட்டல் ஒன்றில் அப்போது 15 வயது 9 மாதம் நிரம்பிய அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்த தாக முகமது அர்ஃபஷியர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இக்குற்றத்திற்காக அவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் தேதி 15 ஆண்டுச் சிறைத்தண்டனையும் ஆறு பிரம்படிகளும் வழங்கியது.


