கோலாலம்பூர் செப் 2- ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் பப்ளிக் முச்சுவல் பெர்ஹாட் நிறுவன அறங்காப்பு நிதியை உட்படுத்திய 28 லட்சம் வெள்ளி மோசடி தொடர்பில் சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கு எதிராக எதிர்வாதம் செய்யும்படி கினாபாத்தாங்கன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ பூங் மொக்தார் ராடின் மற்றும் அவரின் மனைவி டத்தின்ஸ்ரீ ஜிஜே இஸேத்தேவுக்கு இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
அரசுத் தரப்பின் விசாரணையின் முடிவில் 66 வயதான மொக்தார் மற்றும் 44 வயதான ஜிஜே ஆகியோருக்கு எதிரான வழக்கில் அடிப்படை முகாந்திரம் உள்ளதை புரோசிகியூஷன் தரப்பு நிரூபித்ததைத் தொடர்ந்து நீதிபதி ரோஸினா ஆயோப் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
பப்ளிக் மியூச்சுவல் அறங்காப்பு நிதித் திட்டத்தில் 15 கோடி வெள்ளியை பெல்கிரா முதலீடு செய்வதற்கான அனுமதியைப் பெற்றுத் தருவதற்காக 28 லட்சம் வெள்ளியை லஞ்சமாகப் பெற்றதாக மொக்தார் மீதும் இந்த மோசடியில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக ஜிஜே மீதும் கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டது.
பெல்கிராவின் வாரியத்தின் நிர்வாக அதிகாரமில்லாத தலைவராக இருந்த மொக்தார் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் 12 மற்றும் 19 ஆம் தேதிக்கு இடையே இங்குள்ள தாமான் மெலாவத்தி பப்ளிக் பேங்க் கிளையில் இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.


