ஷா ஆலம், செப் 2- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவப் பரிசோதனை திட்டம் இவ்வார இறுதியில் மூன்று இடங்களில் நடைபெறவுள்ளது.
பத்தாங் காலி மற்றும் கோல குபு பாரு தொகுதிகள் நிலையிலான பரிசோதனை இயக்கம் நாளை சனிக்கிழமை கம்போங் சுவாங் ராசா, சமூக மண்டபத்தில் நடைபெறும்.
காஜாங் தொகுதி நிலையிலான மருத்துவப் பரிசோதனை இயக்கம் வரும் ஞாயிற்றுக் கிழமை சௌஜானா இம்பியான், டேவான் ஸ்ரீ செம்பாக்கவிலும் தஞ்சோங் சிப்பாட் தொகுதிக்கான இயக்கம் அதே தினத்தன்று கம்போங் குண்டாங் டேவான் ஸ்ரீ குண்டாங்கிலும் நடைபெறும்.
காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் இந்த இலவச பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்ள விரும்புவோர் செலங்கா செயலி வாயிலாக முன் பதிவு செய்து கொள்ளலாம்.
மாநிலத்திலுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் இந்த இலவச மருத்துவ பரிசோதனை இயக்கத்தை நடத்துவதற்கு மாநில அரசு 34 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
இத்திட்டத்தின் வழி நோய்ப் பின்னணி கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், உடல் பருமனானவர்கள் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை முறையைக் கடைபிடிக்காதவர்களை இலக்காக கொண்ட இந்த மருத்துவ பரிசோதனைத் திட்டத்தின் மூலம் 39,000 பேர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


