ஷா ஆலம், செப் 2- டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அவரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோருக்கு விதிக்கப்பட்ட தண்டனை மக்களின் மிகப்பெரிய ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என்று சுத்தமான மற்றும் நேர்மையான தேர்தலுக்கான கூட்டமைப்பு (பெர்சே 2.0) கூறியது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் புரிந்த தியாகமும் வழங்கிய ஆதரவும் அந்த தம்பதியர் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெறுவதற்குரிய சாத்தியத்தை ஏற்படுத்தியது என்று அவ்வமைப்பு தெரிவித்தது.
ஆகஸ்டு 23ஆம் தேதியும் செப்டம்பர் 1ஆம் தேதியும் மலேசிய வரலாற்றில் கால காலத்திற்கும் நிலைத்திருக்கும் என்று இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அது கூறியது.
பெர்சே அமைப்பின் முன்னாள் இயக்கவாதிகளான மரியா சின் அப்துல்லா, டத்தோ டாக்டர் தோ கின் பூன், ஜெய் ஜெய் டேனிஸ், மண்டீப் சிங் ஆகியோர் இந்த அறிக்கையை கூட்டாக வெளியிட்டிருந்தனர்.
தாங்கள் நேசிக்கும் நாட்டைக் காப்பதற்காக தெருவில் இறங்கி நடத்திய இந்தப் போராட்டம் மலேசிய மக்களின் போராட்டமாகும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த அர்ப்பணிப்பும் தியாகமும் தொடரும். பெர்சே 2.0 இயக்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் மலேசிய மக்களை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம் என்றும் கூறினார்.


