ஷா ஆலம், செப் 2- மாநிலத்தில் வேலை செய்யும் தனிநபர்கள் அல்லது குழுவினருக்கு சான்றளிக்கப்பட்ட உயர்நெறி அதிகாரிகள் திட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் ஒருங்கிணைக்கப்பட்ட கழகத்திற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர்.எம்.) அனுமதி வழங்கியுள்ளது.
இந்த குறுகிய காலத்தில் எம்.பி.ஐ. துணை நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 60 பேருக்கு தாங்கள் பயிற்சியளித்துள்ளதாக எம்.பி.ஐ. தலைமை செயல்முறை அதிகாரி நோரிடா முகமது சீடேக் கூறினார்.
இதற்கு முன்னர் எஸ்.பி.ஆர்.எம். மலேசிய ஊழல் தடுப்பு அகாடமியில் இந்த பயிற்சியை சொந்தமாக வழங்கி வந்தது. இதற்கான பதிவு நடவடிக்கையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டதால் இப்பயிற்சியில் பங்கேற்க நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்ததாக அவர் சொன்னார்.
எனினும், எம்.பி.ஐ. மீது எஸ்.பி.ஆர்.எம். நம்பிக்கை வைத்து இந்த பயிற்சியை நடத்துவதற்கான வாய்ப்பினை வழங்கியதைத் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொள்ளும் பணி துரிதமாக மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.
நாங்கள் இடம் மற்றும் வசதிகளை ஏற்படுத்தித் தருவோம். பயிற்சிகளை வழங்கும் பணியை எஸ்.பி.ஆர்.எம். அதிகாரிகளே மேற்கொள்வர் என்று நோரிடா தெரிவித்தார்.
இங்குள்ள ராஜா மூடா மூசா மண்டபத்தில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான உறுதி மொழி எடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.


