பெட்டாலிங் ஜெயா, செப் 2- போதைப் பொருளை பதனிடும் மற்றும் விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டு ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையின் போது அந்நபரிடமிருந்து 611,515 வெள்ளி மதிப்புள்ள 11,538 கிராம் கெத்தாமின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது பக்ருடின் அப்துல் ஹமிட் கூறினார்.
முப்பத்து நான்கு வயதுடைய அந்த ஆடவர் மாலை 3.30 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, ஜாலான் காசிங், சாலையோரம் கைது செய்யப்பட்டார். அவர் ஓட்டி வந்த புரோட்டேன் சாகா காரை சோதனையிட்ட போது அதன் பின்புற பயணிகள் இருக்கையில் மூன்று கிலோ கெத்தாமின் போதைப் பொருள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது என்றார் அவர்.
அந்த ஆடவர் கொடுத்த தகவலின் பேரில் சிராசில் அவர் தங்கியிருக்கும் வாடகை வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார் அங்கு 5,075 கிலோ கெத்தாமின் மற்றும் ஐந்து பொட்டலங்களில் வைக்கப்பட்டிருந்த மேலும் 3,425 கிராம் கெத்தாமின் கைப்பற்றினர் என்று அவர் சொன்னார்.
இவ்வாடவர் கடந்த ஆறு மாத காலமாக போதைப் பொருள் விநியோகத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறிய அவர், போதைப் பொருளை சுமார் 500 கிராம் அளவில் பொட்டலங்களாக கட்டி கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார் என்றார்.
நேற்று இங்குள்ள மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.


