ECONOMY

செல்வாக்குமிக்கவர்களும் தண்டிக்கப்படுவது ஊழலுக்கு எதிராக விடுக்கப்படும் எச்சரிகையாகும்- மந்திரி புசார்

2 செப்டெம்பர் 2022, 3:10 AM
செல்வாக்குமிக்கவர்களும் தண்டிக்கப்படுவது ஊழலுக்கு எதிராக விடுக்கப்படும் எச்சரிகையாகும்- மந்திரி புசார்

ஷா ஆலம், செப் 2- ஊழல் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளில் செல்வாக்குமிக்கவர்களும் தண்டிக்கப்படுவது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்று அனைத்து தரப்பினருக்கும் விடுக்கப்படும் எச்சரிக்கையாகும்  மந்திரி புசார் கூறினார்.

எவ்வளவு உயர்வான இடத்தில் இருந்தாலும் தவறான நடத்தையை கொண்டிருந்தால் அதற்கான விலையை அவர்கள் கொடுத்தே ஆகவேண்டும் என்பதை இந்த தீர்ப்புகள் நினைவுறுத்துகின்றன என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வரம்பு மீறாத பட்சத்தில் ஊழல் என்பது அவ்வளவு பெரிய விஷயமல்ல என ஒரு போதும் எண்ணக்கூடாது. அதிகாரத் துஷ்பிரயோகம் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்று காரணமாக ஒரு அரசாங்கமே வீழ்ச்சி கண்டதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

அண்மையில் நீதிமன்றம் மிகப்பெரிய ஊழல் வழக்கில் தீர்ப்பு வழங்கியது. நேற்று மற்றொரு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவருக்கு நீண்ட சிறைவாசமும் மிகப்பெரிய தொகை அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

இங்குள்ள டேவான் ராஜா மூடா மூசாவில் நடைபெற்ற மந்திரி புசார் ஒருங்கிணைக்கப்பட்ட கழக (எம்.பி.ஐ.) வணிகப் பங்காளிகளின் ஊழலுக்கு எதிரான உறுதி மொழி எடுக்கும் சடங்கில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கத்திலும் அரசாங்க சார்பு நிறுவனங்களில் தொடர்பைக் கொண்டவர்களும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக கூறிய அவர், சட்டத்திற்கு புறம்பான செயல்களில் அவர்கள் ஒரு போதும் ஈடுபடக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.

நமது நிலை கண்ணாடி வீட்டில் இருப்பதைப் போன்றதாகும். முன்னால், பின்னால் மற்றும் பக்கவாட்டிலிருந்தும் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.