சுங்கை பூலோ, ஆக 24- சொந்த வீட்டைப் பெறும் ஒரு தம்பதியரின் நான்கு ஆண்டு காலக் கனவு சவுஜானா பெர்டானா, சிலாங்கூர் கூ வீட்டிற்கான சாவியை நேற்று பெற்ற போது நனவாகியுள்ளது.
திருமணத்திற்குப் பின்னர் தாமும் தன் கணவரும் சொந்த வீட்டைப் பெறுவதற்கு கடுமையாக முயற்சி மேற்கொண்டதாகவும் எனினும் முயற்சி பலனளிக்காத நிலையில் அரசாங்க குடியிருப்பில் அடைக்கலம் நாடி வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாகவும் நுர் ஹம்ரா அபு நாசீர் (வயது 35) கூறினார்.
சிலாங்கூர் கூ வீட்டை வாங்குவதற்கு நாங்கள் கடந்த 2018 ஆம் ஆண்டில் விண்ணப்பம் செய்தோம். எனினும், கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக அத்திட்டம் அமலாக்கத்தில் தாமதம் ஏற்பட்டது என்று அவர் சொன்னார்.
கடந்தாண்டே பூர்த்தியாக வேண்டிய இத்திட்டம் இவ்வாண்டில்தான் முழுமை பெற்றது. இருந்த போதிலும் வாக்குறுதியளிக்கப்பட்டபடி வீடு தயாரானது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக இங்கு நடைபெற்ற நிகழ்வொன்றில் நுர் ஹம்ராவும் மேலும் ஐவரும் சிலாங்கூர் கூ வீடுகளுக்கான மாதிரி சாவியை வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயிலிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.
இதனிடையே, சந்தையைவிட குறைந்த விலையில் மூன்று அறைகளைக் கொண்ட வீட்டை வாங்க முடியும் என தாம் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்று தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் நோர் அத்திகா அஸ்லான் (வயது 31) கூறினார்.
வீடுகளின் விலை அதிகமாக இருந்த காரணத்தால் நாங்கள் வாடகை வீட்டில் தங்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இப்போது இந்த சொந்த வீடு எங்கள் குடும்பத்திற்கு சொர்க்கமாக காட்சியளிக்கிறது என்றார் அவர்.
சவுஜானா பெர்டானா, ஸ்ரீ கெனாரியில் டவுன் ஹவுஸ் பாணியிலான 180 சிலாங்கூர் கூ வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. தலா 1,000 சதுர அடி கொண்ட இந்த வீடுகள் 180,000 வெள்ளி விலையில் விற்கப்படுகின்றன.


