ஷா ஆலம், ஆக 24- கிள்ளான் ஆற்றை ஆழப்படுத்தும் பணியை மேற்கொள்வதற்கு தேவையான 70 கோடி வெள்ளியைத் திரட்டும் பொறுப்பு லண்டாசான் லுமாயான் சென். பெர்ஹாட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் எல்லை தொடங்கி கிள்ளான் வரையிலான 56 கிலோ மீட்டர் பகுதியில் ஆற்றின் கரைகளை வலுப்படுத்துவதும் இத்திட்டதில் அடங்கும் என்று அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.
அந்த நிதியில் 15 கோடியே 50 லட்சம் வெள்ளி தாமான் ஸ்ரீ மூடா வட்டாரத்தில் வெள்ளத் தடுப்பு த் திட்டங்களை மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்படும். இத்திட்டம் அடுத்தாண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
தாமான் ஸ்ரீ மூடாவில் மேற்கொள்ளப்படவுள்ள வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் தொடர்பில் நேற்று இங்கு செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
கோலாலம்பூரில் அடைமழை பெய்யும் பட்சத்தில் கிள்ளான் ஆற்றில் நீர் பெருக்கெடுத்து அருகிலுள்ள பகுதிகளில் நுழைந்து வெள்ளத்தை ஏற்படுத்துகிறது. இதனைத் தடுப்பதற்கு ஆற்றை ஆழப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார் அவர்.
இத்திட்டத்தை மேற்கொள்வதற்கு மூன்றாண்டுகள் வரை பிடிக்கும் எனக் கூறிய அவர், இத்திட்ட அமலாக்கத்தின் மூலம் ஆற்றில் நீரின் கொள்ளளவை 30 முதல் 50 விழுக்காடு வரை அதிகரிக்க முடியும் என்றார்.
கோலாலம்பூர் பகுதியில் இத்தகைய நடவடிக்கையை சம்பந்தப்பட்டத் தரப்பினர் மேற்கொள்வதாக அறிகிறோம். நாமும் அவ்வாறு செய்யாவிட்டால் நீர் பெருக்கெடுக்கும் சம்பவங்கள் தொடரும் என்று அவர் விளக்கினார்.


