பெசுட், ஆக 24- பத்து சட்டவிரோதக் குடியேறிகளை ஏற்றி வந்த பெரோடுவா அல்ஸா ரகக் கார் இங்குள்ள கம்போங் தோக்கில் விபத்துக்குள்ளானது.
நேற்று காலை 7.20 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தின் போது அக்காரில் பத்து கள்ளக் குடியேறிகள் பதுக்கி கொண்டு வரப்பட்டதாக பெசுட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அப்துல் ரோசாக் முகமது கூறினார்.
அந்த கள்ளக் குடியேறிகளை கிளந்தான், குவா மூசாங், சிக்கு என்ற இடத்திலிருந்து பகாங் மாநிலத்தின் கம்பாங்கிற்கு கொண்டுச் செல்ல 1,200 வெள்ளி கட்டணம் அந்த காரின் ஓட்டுநருக்கு வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.
இப்பயணத்தின் போது ஓட்டுநர் தன்னையறியாமல் சற்று கண்ணயர்ந்து விட்டதால் கார் முன்னால் சென்று கொண்டிருந்த புரோட்டான் பெர்சோனா காரை மோதியதாக அவர் குறிப்பிட்டார்.
இதனால் அக்கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்து கொண்டிருந்த புரோட்டோன் வீரா ரகக் காரை மோதியது. சம்பவ இடத்திலிருந்து தப்பியோட முயன்ற மூன்று அந்நியக் குடியேறிகளை பொது மக்கள் வளைத்துப் பிடித்த வேளையில் காயங்களுக்குள்ளான காரின் ஓட்டுநரும் கள்ளக் குடியேறி ஒருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றார் அவர்.
இச்சம்பவத்தில் 19 முதல் 47 வயது வரையிலான நான்கு அந்நிய நாட்டினரும் 34 வயது காரோட்டியும் கைது செய்யப்பட்ட வேளையில் தப்பியோடிய மேலும் ஆறு பேரை தாங்கள் தேடி வருவதாக அவர் தெரிவித்தார்.


