கோலாலம்பூர், ஆக 24- ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சிறை சென்ற நாட்டின் முதல் முன்னாள் பிரதமராக டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் விளங்குகிறார்.
ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றங்களுக்காக விதிக்கப்பட்ட 12 ஆண்டுச் சிறை மற்றும் 21 கோடி வெள்ளி அபராதத்தை கூட்டரசு நீதிமன்றம் நேற்று உறுதிப்படுத்தியது.
எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் சென்.பெர்ஹாட் நிறுவன மோசடி வழக்கில் தாம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதையும் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் ரத்து செய்வதற்கு அவர் மேற்கொண்ட இடைவிடாத முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போயின.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அனுபவிப்பதற்காக 69 வயதான நஜிப் நேற்று மாலை 6.47 மணியளவில் போலீஸ் வாகனங்கள் புடைசூழ கருப்பு நிற வாகனத்தில் காஜாங் சிறைச்சாலையை வந்தடைந்தார்.
முன்னதாக, நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் இருந்தவாறு வாசித்த 20 பக்க அறிக்கையில், நீதித்துறை தமக்கு எதிராகச் செயல்பட்டதாக நஜிப் குற்றஞ்சாட்டினார். குற்றாவாளி என்ற முறையிலும் மேல் முறையீடு செய்தவர் என்ற முறையிலும் இந்த வழக்கின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறேன். நீதித்துறை மிகவும் நியாயமற்ற முறையில் என்னை நெருக்குவதாக உணர்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, நீதிமன்றத்திற்கு வெளியே தனது ஆதரவாளர்களிடம் பேசிய நஜிப், தாம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட போதிலும் தமக்கு முறையான நீதி கிடைக்காது என எனக் கூறினார்.


