ஷா ஆலம், ஆக 24- இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடாவில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களை மேற்கொள்ள 4 கோடியே 65 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.
அத்தொகையில் 1 கோடியே 15 லட்சம் வெள்ளி தடுப்பணைகளை உயர்த்துவதற்கும் நீர் இறைக்கும் பம்ப் இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள், சைரன் போன்ற உபகரணங்கள் வாங்குவதற்கும் பயன்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.
நீர் சேகரிப்பு குளம் அமைக்கும் பணியை மேற்கொள்வதற்காக சிலாங்கூர் மாநில வடிகால் மற்றும் நீர் பாசனத் துறைக்கு 1 கோடியே 50 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய தொகை கால்வாய்கள் மற்றும் நீர் இரைப்பு பம்ப்களை தரம் உயர்த்துவதற்கு பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
கெமுனிங்-ஷா ஆலம் நெடுஞ்சாலையின் அருகே நீர் சேகரிப்பு குளம் மற்றும் பம்ப் கருவிகள் அமைக்கப்படும் எனக் கூறிய அவர், இதற்காக மலேசிய நெடுஞ்சாலை வாரியத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ள வேளையில் இப்பணிகள் அடுத்தாண்டு தொடங்கப்படும் என்றார்.
தாமான் ஸ்ரீ மூடாவில் மேற்கொள்ளப்படும் வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் தொடர்பில் இங்குள்ள சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் கூட்டத்தின் போது அவர் இவ்வாறு சொன்னார்.
இம்மாதம் 20 ஆம் தேதி பெய்த அடை மழை காரணமாக தாமான் ஸ்ரீ மூடா குடியிருப்பின் பல்வேறு பகுதிகளில் ஒரு மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் ஏற்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் தாமான் ஸ்ரீ மூடா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது.


