கோலாலம்பூர், ஆக 24- முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் மேல் முறையீட்டு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் நகல் முன்கூட்டியே ஊடகங்களுக்கு கசிந்தது தொடர்பில் கூட்டரசு நீதிமன்ற தலைமைப் பதிவகம் போலீசில் புகார் செய்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பான இறுதி செய்யப்படாத தீர்ப்பின் நகல் அடங்கிய அறிக்கை “நஜிப் துன் ரசாக்கின் எஸ்.ஆர்.சி. மேல்முறையீடு- தீர்ப்பு“ எனும் தலைப்பில் மலேசிய டுடே இணைய ஊடகத்தில் வெளியானது மற்றும் திருத்தியமைக்கப்பட்ட அந்த ஆவணத்தின் பிரதிநிதிகள் வெளியிடப்பட்டது தொடர்பில் கூட்டரசு நீதிமன்றத் தலைமைப் பதிவகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இவ்விவகாரம் தொடர்பில் உள்விசாரணை தொடங்கப்பட்டு விட்டதாகவும் அம்பலமான அந்த ஆவணம் இறுதி செய்யப்படாத தீர்ப்பின் நகல் என்றும் அவ்வறிக்கை தெரிவித்தது.
அந்த தீர்ப்பின் இறுதி செய்யப்பட்ட முழுமையான வடிவம் நேற்று மாலை 4.00 மணிக்கு நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது என்றும் அது கூறியது.
தீர்ப்பின் நகலை அம்பலப்படுத்தியதானது நீதிமன்றம் செயல்பாட்டின் உயர் நெறிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கிலானது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் நீதித்துறையின் உயர்நெறியைப் பாதிக்கக்கூடிய இத்தகைய சட்டவிரோதச் செயல்கள் மூலம் நீதித்துறை அமைப்பை ஒருபோதும் அசைத்து விட முடியாது எனவும் அது திட்டவட்டமாக கூறியது.
எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் வழக்கில் நஜிப்பிற்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டுச் சிறை மற்றும் 21 கோடி வெள்ளி அபராதத்தை கூட்டரசு நீதிமன்றம் நேற்று நிலைநிறுத்தியது.


