புத்ராஜெயா, ஆக 23- எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் சென்.பெர்ஹாட் நிறுவனத்திற்கு சொந்தமான 4 கோடியே 20 லட்சம் வெள்ளியை மோசடி செய்த குற்றச்சாட்டில் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டுச் சிறை மற்றும் 21 கோடி வெள்ளி அபராதத்தை கூட்டரசு நீதிமன்றம் இன்று நிலை நிறுத்தியது.
தமக்கு எதிராக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் தேதி விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி அந்த முன்னாள் பிரதமர் செய்து கொண்ட மனுவை தலைமை நீதிபதி துன் மைமுன் துவான் மாட் தலைமையிலான ஐவரடங்கிய நீதிபதிகள் குழு தள்ளுபடி செய்தது.
இந்த தண்டனைக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நஜிப் செய்து கொண்ட மனு கடந்தாண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


