ஷா ஆலம், ஆக 23- தனக்கு எதிரான ஊழல் வழக்கின் மேல் முறையீட்டு மனுவை விசாரிப்பதிலிருந்து தலைமை நீதிபதி விலகிக் கொள்ள வேண்டும் என்ற டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் மனுவை கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கில் தாம் பாகுபாடாக நடந்து கொள்ளக்கூடும் என்பதை நிரூபிக்கக்கூடிய ஆபத்தான உண்மைகள் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்படவில்லை என்று தலைமை நீதிபதி துன் மைமுன் துவான் மாட் தனது தீர்ப்பில் கூறினார்.
நான் இந்த வழக்கிலிருந்து விலகிக் கொள்ளும் அளவிற்கு பாகுபாட்டுடன் நடந்து கொள்ளக்கூடிய எந்த விஷயத்தையும் நான் பார்க்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
நம்பிக்கை மோசடி வழக்கில் நஜிப் குற்றவாளியே என கடந்த 2020 ஜூலை 28 ஆம் தேதி தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ முகமது நஸ்லான் முகமது கசாலி, அந்த முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுச் சிறைத்தண்டனையும் 21 கோடி வெள்ளி அபராதமும் விதித்தார்.
கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் விதித்த அந்த தீர்ப்பை மேல் முறையீட்டு நீதிமன்றம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி நிலைநிறுத்தியது.


