கோலாலம்பூர், ஆக 23- குறைந்த சேவைக் கட்டணத்தில் வீடு முழுமையும் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படும் என்று இணையத்தில் வெளியான விளம்பரத்தை நம்பி ஷா ஆலமைச் சேர்ந்த பெண் ஒருவர் பெரும் தொகையை இழந்தார்.
கடந்த வாரம் ‘ஈஸிமெய்ட்‘ என்ற பேஸ்புக் பதிவில் குறைந்த சம்பளத்தில் வேலையாட்கள் சேவை வழங்கப்படும் என்ற விளம்பரத்தை தாம் கண்டதாக ஹரியாத்தி அரிபின் (வயது 61) என்ற மாது பெர்னாமாவிடம் கூறினார்.
‘மெய்ட்ஈஸி‘ என்ற உண்மையான பேஸ்புக் பக்கத்தின் படியாக்கமே இந்த ‘ஈஸிமெய்ட்‘ பக்கம் என்பதை உணராத நிலையில் அந்த விளம்பரத்தை சொடுக்கியதாகவும் அது பின்னர் வாட்ஸ்அப் வாயிலாக அலெக்ஸ் என்ற நபருடன் இணைப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் சொன்னார்.
அலெக்சின் மலாய் மற்றும் ஆங்கில மொழி ஆளுமை அவர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது. அந்த ஆடவர், நடப்பு பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு 16 வெள்ளி மற்றும் இரண்டு மணி நேரத்திற்கு 30 வெள்ளி கட்டணத்தில் பணிப்பெண்ணை வழங்குவதாக வாக்குறுதியளித்தார்.
அந்த ஆடவர் கூறியபடி இச்சேவைக்கான முன்பதிவை செய்ய மேபேங்க்டுயு செயலி வாயிலாக அந்நபர் அனுப்பிய இணைய பக்கத்திற்கு 20 வெள்ளியை அனுப்பினேன் என்று அவர் குறிப்பிட்டார்.
மறுநாள் பணிப்பெண் உங்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார் என அலெக்ஸ் வாக்குறுதியளித்திருந்த நிலையில் அன்றிரவு தன் மகன் பணிப்பெண் சேவை சம்பந்தப்பட்ட இணைய மோசடி குறித்த செய்தியை ஏதேச்சையாக வாசித்ததாகவும் இதனால் சந்தேகமடைந்து தனது வங்கிக் கணக்கை சோதித்த போது பெரும் தொகை அதிலிருந்து மீட்கப்பட்டிருப்பது கண்டு தாம் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் சொன்னார்.
இச்சம்பவம் தொடர்பில் தாம் ஷா ஆலம் செக்சன் 6 போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.


