குவாந்தான், ஆக 23- கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் 14 வயது சிறுமியின் சடலம் ரொம்பின், புக்கிட் இமாமிலுள்ள மலைச்சரிவில் கடந்த ஞாயிறன்று கண்டு பிடிக்கப்பட்டது.
அன்றைய தினம் மாலை 2.45 மணியளவில் கைகள் மற்றும் தலையில் இரத்தம் வழிந்த நிலையில் அச்சிறுமி தரையில் கிடப்பதைக் கண்ட அவரின் உறவினர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
பள்ளி படிப்பை மேற்கொள்ளாத அச்சிறுமி முந்தையை தினம் தொடங்கி கடந்த ஞாயிறு வரை வீடு திரும்பாததைக் கண்ட அவரின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததாக ரொம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் டி.எஸ்.பி. முகமது அஸாரி முக்தார் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் மூன்று பூர்வக்குடி ஆடவர்களை தாங்கள் நேற்றிரவு 9.40 மணியளவில் கைது செய்ததாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், தடுப்புக் காவல் அனுமதியைப் பெறுவதற்காக அம்மூவரும் இன்று ரொம்பின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர் என்றார்.
அச்சிறுமியின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்காக அவரின் உடல் தெங்கு அம்புவான் அஃப்சான் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.


